Thursday, May 13, 2010


தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம். இங்கு தான் இறைவன் ஆண்பாதி பெண்பாதி என்கின்ற தோற்றத்துடன் உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் தருகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் 'திரு' என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது. சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரி முதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது. இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும் சதயநட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர். இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும்.
புராண வரலாறு முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...
கோயில் அமைப்பு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இவ்விடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர். திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும் அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர். இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவன்றால் தன்னை ஆபரணமாக சுமந்து கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேடனின் நாகர் உருவினை காணலாம். நெடும் பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே நாகர் மலையின் முதலிடமாகும். இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்கு குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதணை செய்தும் சக்கரைப்பொங்கல், வெண்பொஙகல் வைத்தும் வழிபடுகிறார்கள். அன்றைய மக்கள் படி வழியாக மட்டும் சென்று நாகதெய்வத்தை வழிபட்டார்கள் இன்று வாகன சாலை அமைத்து நடக்க முடியாதவர்கள் வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும் பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடலாம். இதன் இடதுபுறமுள்ள நாகம் கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் 'சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இப்படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள். இதனையடுத்து பல மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர் கோபுரத்தை காணலாம். இவ்வலயத்தினுள் நாகு, கேது உள்ளிட்ட நவகிரக நாயகர்கள் உள்ளனர். அறுபத்து முணு நாயன்மார்கள் திருஉருவ சிலைகள் உள்ளது. பஞ்சலிங்க மூர்த்திகளின் கோவில்கள் உள்ளன. விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கூத்தப்பெருமான் ஆலயம் உள்ளது. ஏழு கன்னியர் கோவில் உள்ளது. சகஸர லிங்கம் எனப்படும் ஆயிரலிங்கர் ஆலயம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, சேட்டாதேவி, நாகர் ஆலயம், வைரவ தேவர், சூரிய தேவர், சித்தி விநாயகர் மற்றும் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளது. நாகேஸ்வரர் ஆலயம் சிறப்பான சிற்பக்கலையுடன் உள்ளது மலையின் உச்சியில் வந்தீசுவரர் எனப்படும் பாண்டீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது.
தலவிருட்சம் பூர்வகாலத்தில் திருபார்கடல் கடையப்பட்ட போது அதில் உண்ட அழுத்த திவலைகள் பூமியில் சிதறின. அதனால் தோன்றிய கற்பகவிருட்சங்களே தலவிருட்சம் என்று கூறுவர். இவை அனைத்தும் நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்களால் பெரிதும் போற்றப்பட்டன. இக் கோயிலின் தலவிருட்சம் இலுப்பை மரமாகும் மேலும் பெருமாள் கோயிலுக்கு புன்னைமரமும் அமைந்துள்ளது. இது குறிஞ்சி நாட்டை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...
வழிபாட்டு முறை முதலில் ஸ்தூல லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட்டு பிறகு கோவிலின் உட்புகுந்து பலி பீடத்தின் அருகே நின்று ஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். பின் கர்ப்பக கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஏற்றவாறு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று வழிபடவேண்டும். பிறகு நந்தி தேவரையும் துவாரபாலகரையும் வணங்கி கற்பூர ஒளியில் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு நடராஜர், சிவகாமி அம்மை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய தெய்வங்களை முறையாக வணங்கவேண்டும். இறுதியாக நந்தி தேவரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து நமது வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.
வழிபாட்டின் பலன்கள் அதிகாலை செய்யும் ஆலய வழிபாடு முதல் நாள் செய்த பாவத்தை போக்கும் மாலை நேரத்தில் பிரதோசகாலத்தில் செய்யப்படும் வழிபாடு நம் பிறவி தோறும் செயயும் பாவங்களை போக்கிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
மண்டபங்கள் திருமலையின் படிகளின் வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் பக்தர்கள் இளைப்பாறவும், வழி முழுவதும் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றில் சில: செங்குந்தமுதலியார் மண்டபம், காளத்தி சுவாமிகள் மண்டபம், தைலி மண்டபம், சிங்க மண்டபம், நாடார் மண்டபம், செட்டிக்கவுண்டர் மண்டபம், தேவரடியார் மண்டபம், இளைப்பாற்றி மண்டபம், கோபுர வாயில் மண்டபம், நிறுத்த (அல்லது) ஆமை மண்டபம், விலாச மண்டபம், குகை மண்டபம், திருமுடியார் மண்டபம், கோடி அர்ச்சணை மண்டபம், சிங்கத்தூண் மண்டபம், அறுபதாம் படி மண்டபம்.
தீர்த்தம் 1988-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வாகனங்களின் மூலமாகவும் செல்ல வழிசெய்யப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் மலையின் பாதை ஆரம்பமாகிறது. இச்சாலையின் கால்கோல் விழா 1984-ல் நடைபெற்றது சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இப்பாதையில் 15-05-88 முதல் தனியார் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. 16-09-88 முதல் கோவில் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டும் வருகின்றன.
அர்த்தநாரீஸ்வரர் உருவ அமைப்பு அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார். இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும். இங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அலங்காரம் செய்யப்படுகிறது. அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ... செங்கோட்டுவேலவரை வணங்கி தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ள அம்மையப்பன் சன்னதிக்கு செல்லலாம் வலது கையால் தண்டாயுதத்தை பிடித்தவாறு பராபரையின் பாகமாகிய இடது கையை இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நிலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய தோக்கும் பூண்டு பச்சைநிற கோசீக உடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார். அம்மையப்பனின் திருமுன் திருவாயில் கிடையாது. மாறாக துவாரங்களுடன் கூடிய கல்லாலான பலகனி அமைக்கப்பட்டுள்ளது.
தேவியார் இடப்பக்கம் பெற்ற வரலாறு திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருகப் பெருமான் கோபமுற்று நாகாசலம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குமரன் கையிலையிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து பார்வதி தேவியார் மிகுந்த கவலை கொண்டிருந்தார். சோகமே உருவமாக காட்சியளித்தார். அதைக் கண்ட சிவன் அம்மைக்கு மகிழ்வூட்ட எண்ணி அவரைத் தாருக வனத்திற்கு அழைத்து வந்தார். அங்கு உல்லாசமாக எல்லா இயற்கை எழில்களையும் கண்டுவந்தனர். அங்கு ஒரு முல்லைக்கொடி மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை பார்வதிக்கு சிவன் காட்டினார். அதைக் கண்ட அம்மையார் வெட்கப்பட்டு சிவபெருமானின் இருகண்களையும் தன் கைகளால் மூடினார். பரமனின் கண்கள் மறைக்கப்படவே அண்டங்கள் இருண்டன. சிறிது நேரத்தில் அம்மையார் தன் இரு கைகளையும் விலக்கவே இருள் நீங்கியது. எதிர்பாராமல் ஏற்பட்ட இருளின் காரணமாக ரிசிகளும், முனிவர்களும் மேற்கொள்ளும் நித்திய வழிபாட்டுமுறைகள் மாறியது. இதை முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியார் சிவபெருமானை வணங்கி சுவாமி இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். அதற்கு நாம் இருவர் என்ற முறை மாறி நாம் ஒருவர் என்ற உண்மை நிலை ஓங்க வேண்டும். அதற்கு ஒரே வழி தங்கள் உடலில் எனக்கு இடமளித்து இரட்சிக்க வேண்டும் என்றார். தேவியார் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் தேவியாருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்கு உமையே நீ இன்றே புறப்பட்டு இமயமலையில் உள்ள கேதார சிகரத்தை அடைந்து அங்கு தவம் செய்து பின் காசி நகரை அடைந்து விசுவநாத சொரூபத்தை வழிபட்டு காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றங்கரையில் தவம் செய்வாய் அங்கு யாம் காட்சியளிப்பேன் என்றார். அதன்படியே தேவியார் பலகாலம் கடுந்தவம் மேற்கொண்டாள். பின்பு காட்சியளித்த சிவ பெருமான் அம்மையே நீ விரும்பியபடி எமது உடலில் இடம் பெற திருவண்ணாமலையில் தவம் மேற்கொள்வாய் என்றார். பின் கார்த்திகை மாதம் இறுதியில் காட்சியளித்த பெருமான் தேவியே நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு இலக்கானாயோ அந்த கந்தப் பெருமான் கொங்கு மண்டலத்தில் உள்ள கொடிமாடச் செங்குன்றின் மேல் கோயில் கொண்டு உள்ளான். அந்தக் குன்றம் தான் நாம் தங் குவதற்கு ஏற்ற இடமாகும் ஆகவே நீ அங்கு சென்று தவத்தினை மேற்கொள்வாய் என்றார். அதனைக் கேட்ட அன்னை தன் பிள்ளையாகிய வேலனை காணும் ஆசையாலும், சிவபெருமானின் உடலில் ஒரு கூராய் அமரவேண்டும் என்ற விருப்பாலும் திருவண்ணாமலையிலிருந்து நாகாசலம் எனப்படும் திருக்கொடி மாடச் செங்குன்றூர் வந்து அடைந்தார். அன்னை பராசக்தி நாகசலத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்திற்கு மேற்காகவும் இலுப்பை மரத்திற்கு கிழக்காகவும், அமைந்துள்ள தேவ தீர்த்தமே ஏற்ற இடமென்று கருதி அந்த தீர்த்தின் மேலுள்ள தாமரை மலரின் மேல் நின்று தன் தவமந்திரமாகிய பஞ்சசலத்தை உச்சரித்துக்கொண்டு பல காலம் கடும் தவம் புரிந்தார். தவத்தின் இறுதியில் சிவபெருமான் தோன்றி சிவமில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவமில்லை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தனது உடலில் இடது பாகத்தை தேவிக்காக தியாகம் செய்து. அப்பகுதியில் அம்மையின் உடலில் ஒரு பாகத்தை இடம் பெறச்செய்தார். இவ்வாறு சிவனின் உடலில் பாகம் பெற்றதால் பாகாயி என்றனர். இச்சொல்லே பிற்காலத்தில் பாவாயி என மருவி வழங்குகின்றனர். இறைவனை குலதெய்வமாக எண்ணிய மக்கள் தன் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தநாரீ என்றும், பெண் குழந்தைகளுக்கு பாவாயி என்றும் பெயரிட்டனர்.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...
முருகப்பெருமான் திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் முருகப்பெருமான் கோபமுற்று கயிலையில் அம்மையப்பனை விட்டு பிரிந்து காடு, மலை, வனம், வனாந்திரங்களை கடந்து திருவாவினன்குடி குன்றின் மேல் நின்றார் (பழனி) அங்கிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரிந்ததால் அங்கிருந்து புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரியாததால் இந்த இடமே தான் தங்குவவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில் செங்கோட்டுவேலவராக செங்கோட்டுவேலவராக கோயில் கொண்டார் முருகப்பெருமான் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தில் முருகப்பெருமான் செங்கோட்செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் வலதுகரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அணைத்தபடி கம்பீர தோற்றத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த அரிய காட்சியுடன் முருபெருமானை உலகிலேயே இங்கு மட்டுமே காணமுடியும் என்பது மிகச்சிறப்பான ஒன்றாகும். அம்மையப்பன் வேண்டுகோளுக்கிணங்க அம்மையப்பன் அருளிய வேலாயிதத்துடன் தேவர்களை துன்புறுத்திய அசுரன் தராகாசூரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபன்மன் இருவரையும் செங்கோட்டுவேலவர் வென்று கொன்றார். மகா வல்லமை பெற்ற சூரபன்மன் பல வடிவங்களை எடுத்து வேலவனை வெல்ல நினைத்தான் ஆனால் வேலவன் சூரன் இறுதியாக எடுத்த மாமரத்தினை இரண்டாக பிளந்தான் தனது சக்தி வேலாயுத்தால் அம்மரம் மீண்டும் பொருந்தாவண்ணம் அதனை கீழ்மேலாக மாற்றி போட்டான். அதனால் வேலவனின் வலிமையையும், தந்திரத்தையும் அறிந்த சூரன் வேலவா, இந்நாள் வரை நான் பற்றி இருந்த நான் என்ற அகந்தையை எனது அகத்திலிருந்து பிரித்து விட்டாய் அதனால் நான் உன்னிடம் கேட்கும் வரத்தினை கொடுத்து என்னை காத்தருளுவாய் என்று வேண்டினான் அதாவது எனது உடலாகிய இரு பிளவுகளில் ஒன்று உன்னை சுமக்கவும் மற்றொன்று உன் கொடியிலிருந்து கூவவும் விரும்புகிறது என்றான். அதை ஏற்று வேலன் உன் உடல் பிரிவில் ஒன்று என்னை சுமக்கவும் மற்றொன்று என் கொடியிலிருந்து கூவட்டும். என்று அருள்பாலித்தார். மேற்கண்ட செய்தியின் மூலம் செங்கோட்டுவேலவனின் ஆயுதமாகிய சக்தி வேலாயுதம் வாகனமாகிய மயில் மற்றும் கொடியிலிருக்கும் சேவல் முதலியவை முருகன் திருச்செங்கோட்டிற்கு வந்தபிறகே அவருக்கு கிடைத்தது என்பது மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
ஆதிகேசவபெருமாள் நாராயண மூர்த்தி நரசிம்ம உருவில் அசுரன் இரணியனின் வயிற்றை பிளந்து அதிலிருந்து வழிந்த குருதியை குடித்ததால் ஏற்ப்பட்ட பித்தத்தால் அலைந்து திரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை கண்ட சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்து நரசிங்கத்தை கொத்தி தூக்கி கொண்டு அண்ட பகுதிக்கு பறந்து சென்று நரசிங்கத்தை குலுக்கினார். அதனால் பெருகிய குருதி வெளியே கொட்டியது. அதன் பின் நரசிங்கம் பெருமாளாக உருமாறியது அதனால் திருமால் தனக்குண்டான பிரம்மஹத்தியை போக்கி கொள்ள கொடிமாடசெங்குன்றூர் வந்து விஷ்ணு தீர்த்தமென்ற ஒரு சுனையை அமைத்து அதில் நீராடி தவம் செய்து ஆதிபரம்பொருளை வணங்கினார். அவ்வாறு தனது பிரம்மஹத்தி நீங்கிய பின் ஏகாந்த இடமாகவும், எழில் மிகுந்த இனிமை தரும் புனித பூமியாகவும் இருந்ததால் இப்பகுதியிலேயே கோயில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. ஆதிகேசவபெருமாள் ஆலயம் கிழக்கு திசை வாயிலை உடையது. கற்சிலையால் வடிக்கப்பட்ட மூலவர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிகேசவபெருமாள் நீளாதேவி, பூதேவி என்ற தன் இரு சக்திகளையும் வடமும், இடமும் பெற்றுள்ளது. கண்கொள்ளாகாட்சியாகும். மூர்த்திக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் இருக்கிறது. வைகாசி மாதத்தில் நடைபெறும் விசாக தேர்திருவிழாவின் போது இப்பெருமானுக்கும் திருவிழா நடைபெறும். அர்த்தபாகத்திற்கு கொடியேற்றம் செய்த நான்காம் நாள் இப்பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு தான் அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளுவார் அப்போது அவருடன் சேர்ந்து ஆதிகேசவ பெருமானும் நகர் நோக்கி வருவார். பின் ஆதிகேசவபெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதி வழியாக ஊர்வலம் நடைபெறும்.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...
பூஜைகள் இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு காலை பூஜை (காலை 6-7மணி வரை) உச்சி காலம் (12-1 மணி வரை) மாலை பூஜை (4-5 மணி வரை) நடைபெற்று வருகின்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் திறந்திருக்கும். பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டு இன்றும் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆத்மார்த்த மரகதலிங்கத்திற்கு முதலில் அதிகாலையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரிசையாக எண்ணை காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளைநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனை பட்டினாலும், பல வகை மலர்களாலும் அலங்காரம் செய்வர். அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனுக்கு முதலில் மூலமந்திரங்களில் வடமொழியில் அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதனை ஆவாகனம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இறைவனுக்கு வெறும் அன்னம், பாயச அன்னம், எள் அன்னம், பயறு அன்னம், சக்கரை அன்னம் போன்ற அன்னங்களை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது.
கோபுரம் திருமலையின் வடக்கு பார்த்த வண்ணம் கம்பீர தோற்றத்துடன் உள்ள இராஜ கோபுரத்திற்கு கருங்கல்லால் ஆன அடித்தளம் கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்த திரியம்பக உடையார் என்பவரால் கி.பி.1521 -ல் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 29 ஆண்டுகளுக்கு பிறகு சதாசிவராயரின் ஆட்சியில் நரசிங்கராமாச்சி என்பவரால் கிபி 1550ல் இக்கோபுரத்தின் மேல் பகுதி செங்கற் பணிகள் முடிக்கப்பட்டு குளிகையும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு குமரமங்கலம் நாகமலைகவுண்டரின் குமாரர் சடையப்பகவுண்டர் என்பவர் மக்களின் பொருளுதவியுடன் இக்கோபுர திருப்பணிகளை செய்து முடித்தார். மேற்கண்ட செய்திகள் திருச்செங்கோட்டு திருப்பணி மாலை கல்வெட்டின் மூலமாக அறியப்படுகிறது. இக்கோபுரம் 475 ஆண்டுகள் பழமையானது. இக்கோபுரத்தில் செய்யபபட்டுள்ள சிற்ப வேலைபாடுகள் நமது முன்னோர்களின் சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோபுரம் 84.5 அடி (18.21 மீட்டர்) உயரமுடையதாய் ஐந்து நிலைகளுடன் மிக கம்பீரமாய் காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
திருவிழாக்கள் ஆண்டின் வைகாசி மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை விழாக்கள் நடைபெறுவது உண்டு. இதை பிரமோற்சவம், மஹாத்ஷவம் என்றும் கூறலாம். இதே போல் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழியாகவும், மலைப்பாதை வழியாகவும் சென்று அம்மையப்பனை தரிசிக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. திருக்கொடிமாட செங்குன்றூர் என போற்றப்படும் இங்கு மாதந்தோறும் கீழ்கண்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரையில் சித்திரா பெளர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா, பத்திரகாளியம்மன் திருவிழா, ஆனியில் நடராஜர் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மலைக்கோயில் கெளரி விரதம், நவராத்திரி விரதம், ஐப்பசியில் பெரிய மாரியம்மன் திருவிழா, கார்த்திகையில் திருமலையில் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் திருமலை படி திருவிழா, மாசியில் மாசி மகம், சிவராத்திரி திருவிழா, பங்குனியில் உத்திரவிழா. படித்திருவிழா 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இறைபணி மன்றங்கள், சபைகள், சங்கங்கள், பஜனை குழுக்கள், கோஷ்டிகள், பஜனை மடங்கள் என மொத்தம் 92 குழுக்கள் சேர்ந்து இத்திருவிழாவை ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடத்தி வருகின்றனர். இத்திருவிழாவின் போது மலையின் மீது ஏறிச்செல்ல அமைக்கப்பட்டுள்ள மலையின் முதல்படியிலிருந்து பூஜையை தொடங்கி ஒவ்வொரு படியாக மேலேறிச்சென்று 60-ம் படியில் சிறப்பு பூஜைகளை செய்து மேலே திருக்கோயில் வாயில் வரை ஏறிச்சென்று பூஜையை நிறைவு செய்வார்கள். கேதார கெளரி விரதம் சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சி ஆவணி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கி புரட்டாசி கிருஷ்ணபட்ச தேய்பிறையில் சதுர்த்தியில் கேதார கெளரி விரத விழாவாக இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர்.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...ஆதிநாகேஸ்வரர் பூஜை அருள்மிகு நாகேஸ்வரர் வழிபாட்டு குழுவினரால் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் 4-30 மணிமுதல் 6-00 மணிவரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாகாச்சலம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற இப்பூஜையில் கலந்து கொள்ளும், நாகசர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு திருமணம் நல்ல முறையில் அமையும் என்று மக்களால் நம்பப்படுகிறது. வைகாசி விசாகம் பிரதி வருடம் வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது திருச்செங்கோடு மாநாகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் போது இறைவனின் தரிசனத்தை காண ஏழுகரைநாட்டு மக்களும் திருச்செங்கோட்டில் கூடியிருப்பார்கள். பிருங்கி முனிவரின் சாபத்தால் புலி வடிவம் பெற்றிருந்த சயங்கலம் என்ற நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சிங்கவர்மன் தன் சாபவிமோசனத்திற்காக திருச்செங்கோடு வந்து நாகமலையை மூன்று முறை கிரிவலம் வந்து இறைவனை வணங்கி சுய உருவை பெற்றார். அந்நாளில் அப்புலி தங்கிய குகையை மக்கள் அன்று கூட்டுப்புலி குகை என்று கூறினர். இந்நாளில் அந்த இடத்தை கூட்டப்புலி என்றும் கூட்டப்பள்ளி என்றும் மக்கள் கூறுகின்றனர். இதனை போற்றும் வகையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மன்னன் தன் நாடு சென்று ஏராளமான செல்வங்களுடன் திருக்கொடி மாடசெங்குன்றூர் வந்து இறைவனுக்கு பல திருப்பணிகளை செயது பின் சிறப்புமிகு தேர்திருவிழாவினையும் கொண்டாடினார் என்று அறியப்படுகிறது. இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும் அதாவது ஆலயத்திலுள்ள மூலவமூர்த்தியின் வாகனம் எதுவோ அதன் உருவத்தினை துணிக்கொடியில் வரைந்து பூஜைகள் செயது பின்னர் கொடிமரத்தின் உச்சியில் ஏற்றுவர். இத்தகு நிகழ்ச்சியில் நமது மலைக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்தது ஏனெனில் எல்லா கோயில்களிலும் கொடிமரம் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மூன்று கொடி மரம் அமைந்து ஆலயத்தை சிறப்பு செயகின்றன. இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்படும் பிறகு திருத்தேர் மீது அமர்ந்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதி வழியாக தேர்இழுக்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் அதாவது 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு செல்லுவார். இவ்வாறு திருச்செஙகோட்டு மக்களால் வைகாசி விசாகத்திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. வைகாசி திருவிழாவின் 14 நாட்கள் நிகழ்ச்சிகள் 1 ஆம் நாள் திருவிழா - காலையில் சுவாமிக்கு கொடியேற்றம் நடைபெறும் அதன் பிறகு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்2, 3-ஆம் நாள் திருவிழா - மலைமேல் உள்ள மண்டபத்தில் மும்மூர்த்திகளுக்கும் மண்டபக்கட்டளை நடைபெறும்4 ஆம் நாள் திருவிழா - காலை ஆதிகேசவ பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு அன்று இரவு சுவாமிகள் மலைமேலிருந்து புறப்பட்டது. மலை கீழ் வந்து வண்ண வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு வீதிகளின் வழியாக வலம் வரும் இத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது5, 6, 7, 8 ஆம் நாள் திருவிழா - இத்திருவிழாவின் போது சுவாமிகளுக்கு திருச்செங்கோட்டை சுற்றி உள்ள ஊர்மக்களின் சார்பாக சிறப்பான பூஜைகள் மற்றும் கட்டளைகள் நடைபெறும்9 ஆம் நாள் திருவிழா - காலை 9-00 மணிக்கு மேல் அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேரில் எழுந்தருளல். அன்று விநாயகர், செங்கோட்டு வேலவர் திருதேர் வடம்பிடித்தல் நடைபெறும்10 ஆம் நாள் திருவிழா - ஆதிகேசவ பெருமான் திருதேரில் எழுந்தருளல்.அர்த்தநாரீஸ்வரர் திருதேர் வடம் பிடித்தல்
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...11 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருதேர் இழுத்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்12 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருதேர் நிலைநிறுத்தம் மாலை ஆதிகேசவ பெருமான் திருதேர் இழுத்தல், நிலை சேர்த்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்13 ஆம் நாள் திருவிழா - சுவாமிக்கு மண்டபக்கட்டளையும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்14 ஆம் நாள் திருவிழா - திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் செல்லுவார்
திருப்பணிகள்கிபி 1509 முதல் 1565 வரை விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலத்தில் அவர் சார்பாக இங்கு ஆட்சி செய்து வந்தவர்களின் தலைமையின் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.கிபி 1550-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரசிங்க ராமாஞ்சி என்பவரால் திருமலையில் வடகோபுரமாகிய ராஜகோபுரத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து மூலம் செயயப்பட்டது. கயிலாயநாதர் கோயில் முன் நிறுவப்பட்டுள்ள 60 அடி கம்பமும் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது.கிபி 1608-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாரிராஜந்திர மகிபன் என்பவரால் ஆதிகேச பெருமாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இது நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளாகிறது.இவரின் காலத்தில் தான் கிபி 1617-ல் கையிலாயநாதர் ஆலயத்தின் முன் கோபுரம் பூர்த்தி செய்யப்பட்டது. இன்றைக்கு சுமார் 390 ஆண்டுகளாகிறது.கையிலாயநாதர் ஆலயத்தின் கோபுரவேலை முடிந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு கிபி 1679-ல் சங்ககிரி ஆட்சி பீடத்தில் இருந்த தேவராசேந்திர ரகுபதி என்பவரால் கையிலாயநாதர் ஆலயத்தின் வாயிற் நிலைக்கதவு செய்யப்பட்டது. கிபி 1599ல் மோரூர் கண்ணங்குலம் வேலபூபதி சந்ததி வெற்றி குமாரசாமி என்பவரால் அர்த்தநாரீஸ்வரரின் கிழக்கே உள்ள நந்தி, பலிபீடம் முதலியன நிறுவப்பட்டது.கிபி 1588-ல் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் திருக்கோயிலுக்கு நில தானம் செயயபபட்டதாக சுப்பரமணி சுவாமி கோவிலுக்கு வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிபி 1522-ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழமண்டலத்தை சேர்ந்த திரியம்பக உடையார் அர்த்தநாரீஸ்வருக்கு திருவிழா நடத்துவதற்கு நகரின் பல வரிகளை தானமாக கொடுத்ததாக அரியப்படுகிறது.1619-ல் இம்முடி நல்லதம்பி காங்கேயன் செங்கோட்டுவேலவர் மண்டபத்தையும், அர்த்தநாரீஸ்வரர் மண்டபத்தையும் கட்டினார்.
சிற்ப கலைகள் இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் இக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. செங்கோட்டுவேலவர் சன்னதியின் முன் உள்ள கல்தூண்களில் சிவன் வேட்டுவனாகவும், பார்வதி வேட்டுவச்சியாகவும் காட்சியளிக்கின்றனர். அதே போல் விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும் மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ... குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் உள்ள தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன. இம்மண்டபத்தை சபா மண்டபம் என்று கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியார் அடியாருக்கு நல்லாரை சிறப்பித்த இடம் இவ்விடம் என்று கூறுவர். இப்பகுதியில் ஆமைமண்டபம் என்று அழைக்கப்படும் சிறியமண்டம் ஒன்று உள்ளது. இதன் மேல்பகுதி மரத்தாலானது. வைகாசி விசாக திருவிழாவின் போது இறைவனை இம்மண்டபத்தில் எழுந்தருள செய்து வழிபாடு நடைபெறும். அப்போது இதன் மேல்பகுதியில் மலர்களை கொட்டி இயந்திரத்தின் மூலம் இயக்கினால் இதில் உள்ள துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக இறைவனின் மீது விழும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாக கருதப்படும். வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். நரிகணபதி சன்னதியை ஒட்டி தென்புறத்தில் தாண்டவபத்திரை விலாச மண்டபம் அமைந்துள்ளது. ஊர்துவ தாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டு காளியும் எதிரெதிரே இருந்து நடனமாடும் திருவுருங்கள் இங்கு கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆமை மண்டபத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சஙகலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிறப்பம்சங்கள்-ஆண்பாதி பெண்பாதியாய் அம்மையப்பன் உலகிலேயே இங்கு மட்டும் தான் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். -மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.-உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்.-அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற ஆத்மார்த்த மரகதலிங்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.-வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.-ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.-அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.-உலகிலேயே வேறு எங்கும் காணாத புதுமையாய் அர்த்தநாரீஸ்வரரின் அர்ச்சனையின் போது ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்சிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பு. -வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும். -வேறு எந்த சிவதலங்களிலும் இல்லாதவாறு இங்கு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. -திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...-அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். -வேலவன் முருகன் சன்னதிக்கு போகுமுன் வலதுபுறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். -தமிழக அரசால் தொடங்கப்பட்ட அன்னதானதிட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக ஒரு ஆண்டிற்கு தேவையான நிதி நன்கொடையாக சேர்ந்தது இக்கோயிலிலே. -17-1-1964-ல் திருமலையில் கோடி அர்ச்சனை நடைபெற்றதாக திருச்செங்கோடு மான்மியம் மூலம் அறியப்படுகிறது.
சுற்றுலா தகவல்கள் இத்தலமானது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 370 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வசதியாக அனைத்து நேரங்களிலும் பேருந்துகள் இயங்குகின்றன. இத்திருத்தலம், நாமக்கல் மாவட்டத்திற்கு மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், கரூர் மாவட்டத்திற்கு வடக்கே 35 கி.மீ. தொலைவிலும்,சேலம் மாவட்டத்திற்கு தெற்கே 45 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் உள்ள திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. திருச்செங்கோட்டிற்கு மிக அருகில் ஈரோடு மற்றும் சேலம் இரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு வெளிஊரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடனும் கூடிய தங்கும் விடுதிகளும் உள்ளன.
கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் திருச்செங்கோட்டில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் மற்றும் சில செப்பு பட்டயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளின் மூலமாகவே பெரும்பாலான திருமலையில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது பிரதிநிதிகளாக செயல்பட்டவர்கள் மன்னரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் பெரும்பாலான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் குறிப்பாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உளள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
தீர்த்தங்கள் தென்னகத்திற்கு புண்ணியதலமாக சிறந்து விளங்கும் திருச்செங்கோடு மலையை சுற்றி 108-தீர்த்தங்கள் அமைந்திருந்தன ஆனால் இந்நாளில் இவற்றில் ஒரு சில மட்டுமே நம்மால் காண முடிகிறது. இத்தீர்த்தங்களில் மூழ்கினோர் முக்தி அடைவர் என்றும் நோய்கள் நீங்கும் என்றும் இன்னும் சில தீர்த்தங்களில் நீராடினால் (குமாரதீர்த்தம்) பிள்ளைபேறு பெறுவர் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. இவற்றுள் சில தீர்த்தங்கள் சிவபெருமானாலும் விநாயபெருமானாலும் முருகபெருமானாலும், தேவர்கள் மற்றும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதாக நம் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்ற்றுள் சில முக்கிய தீர்த்தங்கள் கணபதி தீர்த்தம், தேவ தீர்த்தம், அம்மையப்ப தீர்த்தம், குமார தீர்த்தம், சிவ தீர்த்தம், சக்தி தீர்த்தம், பாவநாச தீர்த்தம், பைவர தீர்த்தம், நாக தீர்த்தம், சூரிய புஷ்கரணி, அல்லி சுனை, சித்தர் முலிகை தீர்த்தம் போன்றவையாகும். மேற்கண்டவற்றில் தேவ தீர்த்தம், (அம்மையப்பர் தீர்த்தம்) மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இது மாதொருபாகனின் (அர்த்தநாரீஸ்வரர்) கருநிலை கூடத்தில் அவர்தம் திருவடி கீழ் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தை மற்றவர்கள் அணுக இயலாது இத்தீர்த்தத்தை அர்த்தநாரீஸ்வரர் அர்ச்சகர்கள் மட்டுமே எடுத்து பக்தர்களுக்கு வழங்குவது இன்றும் உள்ளது. மற்றொரு சிறப்பு இத்தீர்த்ததம் வற்றாத தீர்த்தமாக இன்றளவும் உள்ளது
தமிழக கோவில்கள்
சிவன் கோவில்கள்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
... தொடர்ச்சி ...
கிரி வலம் அர்த்தநாரீஸ்வரர் மலையாகிய திருச்செஙகோடு எனும் கிரியை வலம் வருவது திருச்செஙகோட்டு கிரிவலம் என்பர். இக்கிரி வலத்தை வடமொழியில் கிரிபிரதட்சணம் என்பர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிவ பக்தர்கள் தங்கல் குடும்பத்துடன் திருச்செங்கோட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்து தங்கள் பாவங்களை போக்கி நற்பயன் பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோட்டு பெளர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பெளர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர். திருச்செங்கோட்டு கிரி ஓங்காரவடிவானது ஓங்காரம் சிவ வடிவமானது. எனவே கிரி என்பது சிவவடிவமானது என இதனால் புலப்படுகிறது. சிவ வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் நாககிரி வலம் வருதலால் கிட்டும் என்பதை மனப்பூர்வமாக அறியலாம் என்று பக்தர்கள் கூறுவர். நாககிரியை வலம் வருவது கர்ப்பகாலம் சிவனை பூஜை செய்ததால் கிட்டும் பலனை தரும். அது சமாதி நிலையில் இருந்து அடைகின்ற மேலான பலனை தருக்றது. அது பூமியை வலம் வந்த பலன் கிட்டும் அது சிவலிங்க பிரதிஷ்டை ப லனையும் சிவபூஜை செய்த பலனையும் தருவதுடன் பெரிய சிவன் கோயிலை கட்டிய பலனையும் தரும். சிவ தலங்களை தரிசித்த பலனை தருவதுடன் இந்திர பதவி, மகேஸ்வர பதவி, சிவ பதவியும் தரும் அது சிறந்த கல்வியை தரும் நினைத்த காரியங்களை நடக்கவும் செய்யும். மனம், மெய்களை தூய்மை செய்து கொண்டு மகளிரை நினையாமலும், கலவாமலும் குரோத மாதமார்ச்சாரிய உணர்வில்லாமலும் கிரிவலம் வரவேண்டும். பெளர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோட்டை வலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும். திருச்செஙகோட்டை வலம் வரும் பக்தர்கள் முதலில் மலையடிவாரம் செல்ல வேண்டு்ம் மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம் கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும். கிரிவலம வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது. தூங்க கூடாது. அது கிரிவல பயனை போக்கிவிடும் என்று திருச்செங்கோட்டு மாண்மியம் சொல்கிறது. பாண்டுவின் புதல்வர்களான தருமன், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனவாசமும் 1 ஆண்டு அஞ்ஞாத வாசமும் (பிறர்காணாமல் வாழும் வாழ்வு) வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நாட்களில் அவர்கள் பல புண்ணிய தலங்கள் மலைகள் தீர்த்தங்கள் முதலியவற்றை தரிசித்து கொண்டு வரும்போது திருச்செங்கோட்டு மலையை கண்டனர் அதன் மீது ஏறி கணபதி தீர்த்தம், குமார தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் முதலியனவற்றில் நீராடி மகிழ்ந்தனர். புள்ளியன் சுனையில் படிந்திருந்த சக்கரம் அவர்கள் சத்ருக்களுடன் பேரிடும் போது பேராபத்து காலத்தில் அவர்களின் உயிர்களை காத்து பகைவர்களை சாயசெய்வதாகக் கூறியதாக அறியப்படுகிறது. அவர்கள் திருச்செங்கோடாம் திவ்யமலையிலுள்ள தீர்த்தங்களையெல்லாம் ஆடி உமையொரு பாகனையையும், குமரகடவுளையும் துதித்துவந்தனர். அங்கு சனற்குமாரன் அகத்தியன், புலத்தியன், விஞ்சையர்கள், சித்தர்கள் முதலிய பெரியோர்கள் தவம் புரிந்தனர். அவர்கள் கிரிவலம் வந்த பாண்டவர

Wednesday, May 12, 2010



சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
1. வரவேற்புக்கு மறுமொழி

செப்டம்பர் 11, 1893அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர் பின்பற்றும் தன்மை யாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றி னாலும் அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ! இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.' பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி ...
2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?

செப்டம்பர் 15, 1893 ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது. 'நீ எங்கிருந்து வருகிறாய்?' 'கடலிலிருந்து' 'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது. 'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை. காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி ...
3. இந்து மதம்
செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன. அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன். தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்

... தொடர்ச்சி ...

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது. இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும். சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்? ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா? வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை. பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி ...

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும். இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!' தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது. சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்? இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்

சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி
...

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்? இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.' 'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல. இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன. அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். 'அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம். மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி
...

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது ஒரு பிரர்த்தனை. ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது' என்றார். ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை. கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை. இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும். இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, 'நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம். இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி
...

இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்'. நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது. எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது. ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும். அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான். தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி ...

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்றுகேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து! பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன? என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான். எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும். அவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : 'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.' இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி
...

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது. வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும். சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று. ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல. இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன. ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.
விவேகானந்தர் நூல்கள்
சுவாமி விவேகானந்தரின்
சிகாகோ சொற்பொழிவுகள்
... தொடர்ச்சி ... இன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும். அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது. இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.

Tuesday, May 11, 2010


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
நாமக்கல் ஜில்லா

ஆண்டு திட்டமிடல் பைட்டக்
அன்புடையீர்,
இந்த ஆண்டு சங்க சிக்ஷா வர்க முடிந்து உற்சாகமான சூழ்நிலையில் நமது ஜில்லாவின் இந்த ஆண்டிற்கான திட்டமிடல் பைட்டக் ராசிபுரத்தில் ஏற்பாடு ஆகியுள்ளது.ஆவசியம் கலந்து கொண்டு சங்க வேலை சிறப்பாக நடைபெற அனைவரும் சேர்ந்து சிந்தனை செய்வோம் .

நாள் : 16.05. 2010 ஞாயிறு
15.05.2010 சனி இரவு வரவேண்டும் .
இடம் : ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி .
டாக்டர் ஹெட்கேவார் நகர் , காட்டூர் ,ராசிபுரம்

காக்கிநிக்கர்,நோட்டு, பேனா அவசியம் எடுத்து வரவும்


என்றும் தாயகப்பணியில்,
சுப்ரமணியம்,
ஜில்லா கார்யவாஹ்.

குறிப்பு : ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிட நடை தூரத்தில் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது

Monday, May 10, 2010

Atrocity against Dalits: Solution

மெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்

இந்தியா விடுதலை அடைந்து அறுபதாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சமுதாய வன்கொடுமைகளோ தொடர்கின்றன தொடர்கதையாக.

சொந்த நாட்டில், சொந்த சகோதரர்களால் தீண்டத்தகாதவராக நடத்தப்பட்ட சமுதாயத்தினர் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார்கள். தீண்டாமையை ஒரு வன்கொடுமையாக பிரகடனம் செய்கிறது அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியல் சட்டம். தீண்டாமை ஒரு பாவம் என்கிறார் மகாத்மா காந்தி. ஆனால் இவை அனைத்துக்கும் அப்பால், கிராமங்களில் வாழ்வதற்கான உரிமையும் சுயமரியாதையும் தலித் சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டே வருகின்றன.

அத்தகைய ஒரு நிகழ்ச்சிதான், திண்டுக்கல் மாவட்டம் மெய்கோவில்பட்டி கிராமத்தில், தேவேந்திரகுல வெள்ளாளர் எனப்படும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சடையாண்டி என்கிற இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆனால் அதிகார வர்க்கமும் சாதி உணர்வும் இணையும் போது, அநீதி இழைக்கப்பட்டவரே குற்றவாளி போல தலைமறைவாக வாழ நேரி்ட்டுவிடுகிறது. இது கொடுமையின் உச்சங்களில் ஒன்று.

இன்று குடும்பத்தையும் கைக்குழந்தையையும் விட்டு சொந்த ஊரையும் விட்டு தலைமறைவாக பகுஜன்சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் அந்த இளைஞர். அவர் செய்த குற்றம்தான் என்ன?

அந்த கிராமத்தின் தலித் பகுதிகளில் இரண்டு தலித் வகுப்பினர் வசிக்கின்றனர். கிராமத்தின் பிற பதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தலித் பகுதியின் ஆதார அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருந்தன. வீதிகளின் அருகிலேயே குண்டு குழிகள், கழிப்பிட வசதி இல்லாதது போன்ற அவலங்கள். விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாத குழந்தை.இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாகக் காண முடிகிறது. சடையாண்டி மீதான தாக்குதல் கிறிஸ்தவ ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டது என்ற உண்மை, மதம் மாறினால், சாதியம் அப்படியே மறைந்துவிடாது என்பதை மீண்டும் முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது.

ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உண்மை நிலவரம் என்ன என்று அறிய அந்த இளைஞரின் கிராமத்துக்கு சென்ற போதுதான், அந்த உண்மையின் மற்றொரு விசித்திரம் நமக்கு காணக்கிடைத்தது. அது வேதனையானதும் கூட.காவல் துறையிலும், உள்ளூர் அரசு சேவை மையங்களிலும், கல்விச்சாலைகளிலும் தலித் சமுதாயத்தினருக்கு பாதுகாப்பில்லை. அரசு அதிகாரிகள் தலித்துகளை சரியான முறையில் கவனிப்பதில்லை முழுமையான நேரத்தை ஆதிக்க சாதியினருடனேயே செலவழிக்கின்றனர் என்பது தலித் மக்களின் குமுறல்.

ஆதிக்க சாதிகள் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுடன் இணைந்துகொண்டு, நலிவுற்ற பிரிவினரை, அதிலும் குறிப்பாக மதம் மாறாமல் இருக்கும் நலிவுற்ற பிரிவினரை அதிக உக்கிரத்துடன் தாக்குகிறார்கள். நாம் இந்த மக்களிடம் பேசியபோது, இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

கிறிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

முதலாவதாக, தலித்துகளின் குடியிருப்புக்களை சுற்றி நிலங்களை வளைத்துப் போட்டுவிட்டு, ஆதிக்கசாதியினருக்கு ஆதரவாக பாதிரியார் தலைமையில் வேலி அமைத்திருக்கிறார்கள். இரண்டாவதாக, கிறிஸ்தவ மக்களுக்கும் தலித் இந்துக்களுக்கும் இருக்கும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில், வேண்டுமென்றே கிறிஸ்தவ சப்பர விழாவை அம்மன் கோவிலை ஒட்டி நடத்தி கோவிலில் சிறிய உடைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.பொதுவாக இரண்டு ஊர் மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக காளியம்மன் கோவில் இருந்திருக்கிறது. பல ஆதிக்க சாதி சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் (கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்த போதிலும் கூட!!) தாங்கள் காளியம்மன் மீது சத்தியமாக, தலித் சமுதாயத்தினரை தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கவில்லை என்றார்கள். இந்த தாக்குதல் நடக்கவேயில்லை என்ற பேச்சையும், அது ’சின்னப் பசங்க’ செய்த தவறு என்ற பேச்சையும் ஆதிக்க சாதியினரிடையே காணமுடிந்தது. மேலும் இரண்டு பக்கங்களிலுமே சாதியத்தலைவர்களின் பங்கு எதிர்மறையாக உள்ளதை தலித் மக்கள் எடுத்துச் சொன்னார்கள்.

தலித்துகளுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே நிலவும் உறவுகள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. மானுடத்தின் சுய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவை. இது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் பாரம்பரிய சாதிகளுக்கு இடையேயான உறவுகளில் ஒருவித பங்காளி உறவுத் தன்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உறவுத் தன்மையை வலுப்படுத்திக்கொண்டே, சுரண்டலையும், மானுடமற்ற சாதிய வெறியையும் அழிப்பதுதான் இன்றைக்கு சமுதாயத் தலைவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரிய சவால்.சாதியக் கொடுமைகள் யாரை நோக்கி ஏவப் படுகிறதோ அவரை காயப் படுத்துகின்றன. அந்தக் காயங்கள் அவரை வலிமையாக்கும். சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவையை அவை வெளிப்படுத்தும். ஆனால் கொடுமை செய்பவருக்கோ அது ஆழமான ஆன்மிக வடுவையே ஏற்படுத்துகிறது. கொடுமை செய்பவரை மானுடத்தன்மையிலிருந்து கீழே இறக்கி விடுகிறது.

வெறும் சாதி உணர்வுகளை தூண்டிவிடுபவர்களோ அல்லது அடங்கி செல்ல அறிவுறுத்துவோரோ தலித் விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழகத்தின் தலித் தலைவராக தன்னைத்தானே ஏகபோகமாக முடிசூடிக்கொள்ளும் சிலர், அன்றைக்கு மட்டுமல்ல, அதற்கு பிறகும் அங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த கசப்பான உண்மை இந்த யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.பிறர் மீது வெறுப்பை சுமக்காமல், சாதியமற்ற சமுதாயத்தை ஏற்படுத்த நமது ஆன்மிக சமுதாயத் தலைவர்கள் நல்வழியைக் காட்டியுள்ளார்கள். புத்தரின் அறவழியைத் தேர்ந்தெடுத்த அண்ணல் அம்பேத்கர், அத்வைதம் கூறும் ஆன்மிக விடுதலையை சமுதாய நீதிக்கு விரிவாக்கிய நாராயணகுரு, தாழ்த்தப் பட்டவர்களுக்காக இன்னுயிர் ஈந்த வீரன் சேகரன், சிதம்பரத்தில் நந்தனாரே மீண்டு வந்ததது போல நமக்காக போராடிய துறவி சகஜானந்தர் ஆகியோர் காட்டிய வழியில் நாம் செல்ல வேண்டும்.

அந்த வழி எளிதான வழியல்ல.
ஆடம்பரத்தின் வழியல்ல.
வன்முறையின் வழியல்ல.

உண்மையான வீரத்தின் வழி.
தியாகத்தின் வழி.
முட்பாதைகள் நிறைந்த வழி.

நாம் அந்தப் பாதைகளில் நடந்து உரிமைகளை வென்றெடுப்போம். அன்பும் தோழமையும் மானுடமும் கொண்ட ஆன்மநேய தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவோம். நம் குழந்தைகள் சாதியத்தின் விஷக்கடிகள் எதுவுமின்றி, மலர்மீது நாளை நடப்பார்கள்.









Wednesday, May 5, 2010

சீனாவில் கம்யூனிஸத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு

சீனாவில் இப்போதெல்லாம் மதத்தை இழிவாகப் பார்ப்பதில்லை. 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 17 ஆவது சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹூ ஜிண்டாவோ நிகழ்த்திய உரையில் ஒரு பத்தி, மதத்திற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பேராயர்கள், மதகுருக்கள், துறவிகள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் எல்லாம் சீனாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். எனவே மதம் மக்களுக்கு அபின் போன்றது என்ற கடந்த கால கோட்பாடு காலாவதி ஆகிவிட்டது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனமான ‘சின் குவா’ மத சுதந்திரத்தை வலியுறுத்தி வருகிறது. நல்லிணக்கம் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் மதம் முக்கியப் பங்காற்றி வருகிறது என்று ‘சின் குவா’ குறிப்பிட்டு வருகிறது. இதை முக்கியமான அம்சமாகக் கருதி இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 சீனப் பேராசிரியர்கள் மத நம்பிக்கை தொடர்பாக விரிவான ஆரய்ச்சி நடத்தினார்கள். 2007 இல் இந்த ஆராய்ச்சி நடைபெற்ற்து. 4,500 பேரிடம் கருத்து கேட்டு விவரம் சேகரிக்கப்பட்டது.

மொத்த ஜனத்தொகையில் 31 சதவீதத்தினர் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 16 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களில் 60 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 1990 களில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் 8 சதவீதத்திற்கும் குறைவே. இது இப்போது 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் அதிகரிப்பு முக்கியமான விஷயமாகும்.

சீனாவில் பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயம் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் முன்பு முக்கிய பொறுப்பாளராக இருந்த ஜாவோ ஜியாவோ என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பிரச்சாரம் செய்துவருகிறார். சீனாவில் 13 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் மட்டும்தான். இதில் 1 கோடியே 10 லட்சம் புரோட்டஸ்டண்டுகள் ஆவர். 50 லட்சம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். ஜாவோ ஜியாவோ தெரிவித்துள்ள புள்ளிவிவரம் உண்மையெனில் சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சம் மட்டுமே.

சீனாவில் மாபெரும் மற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் பொருளாதார மாற்றங்களை மட்டும் நாம் பார்க்கக்கூடாது.

பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன, வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒலிம்பிக் அரங்கங்கள் நிமாணிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு அப்பாலும் பல அபூர்வ நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுள்ளன. மேற்கத்திய பார்வை என்பது உலகியல் சார்ந்தது. உலகியல் சார்பற்றவற்றையும் கவனிப்பதுதான் கிழக்கத்திய பார்வையாகும்.

chinese_krishnaமத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நடைபெற்று வரும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். முஸ்ஸிம்களின் செயல்பாடும், கிறிஸ்தவர்களின் செயல்பாடும் குறிப்பாக தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயமும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. மத்திய தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்க வழக்கமும் மாறத் தொடங்கி உள்ளது. சீனர்கள் பாரம்பரியமாக அரிசி உணவை சாப்பிடுவது வழக்கம். இப்போது அரிசி உணவைச் சாப்பிடுவது குறைந்துள்ளது. நன்கு படிக்காத ஏழைகள் மட்டும்தான் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். புதிதாக கிறிஸ்தவத்திஅத் தழுவியவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துள்ளன. வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் இது உதவுகிறது.

மேற்கு பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சீனாவில் கடந்த காலத்தைப் பற்றி அறியும் ஆவல் மேலோங்கி உள்ளது. சீனாவில் 1960 களில் கலாசார புரட்சி நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள மிங் வம்சத்தைச் சேர்ந்த ராஜ பரம்பரையினரின் சமாதிகள் வெண்பளிங்கில் பளிச்சிட்டு வந்தன. கலாசார புரட்சியின்போது அவற்றுக்கெல்லாம் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது. இப்போது அவற்றை மீண்டும் வெள்ளை நிறத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் இது குறித்துப் பேச தயங்குவது கிடையாது. பெய்ஜிங் நகர் அருகே உள்ள ஒரு புராதனமான இடத்தில் கிங் ராஜ வம்சத்தினரின் கோடைகால அரண்மனை உள்ளது. அதில் 10 கரங்களைக் கொண்ட புத்தரின் சிலை உள்ளது. இதற்கும் விஷ்ணுவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, வெளிநாடுகளில் பிரிட்டீஷ் கவுன்சிலை நிறுவி தனது கலாசாரத்தை பரப்பி வருவதைப்போல சீனா 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கன்பூஷ்யஸ் நிறுவனத்தை நிறுவி தொன்மையான சீன ஞானத்தைப் பரப்பி வருகிறது.

மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு சீனாவைப் பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். சீனாவில் பொருளாதார வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆழமான ஆன்மிக நாட்டம் வலுவாக உள்ளது என்று கூற முடியவில்லை. மார்க்சிஸம் சீனாவில் அர்த்தத்தை இழந்துவிட்டது. புதிய சீனா நமக்கு ஒரு மகத்தான சவாலாகும். இந்தியாவும், சீனாவும் பழங்காலம் முதலே அறிவு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தன. சீனாவும் பல மதங்களைக் கொண்ட கலாசாரங்களைக் கொண்ட நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா மீது சீனர்களுக்கு மிகுந்த நாட்டம் உள்ளது.

1938 முதல் 1942 வரை அமெரிக்காவில் சீனத் தூதராகச் செயல்பட்ட ஜூஷி, ’சீனாவை இந்தியா கலாசார ரீதியாக ஆக்ரமித்து 20 நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரர் கூட எல்லையைத் தாண்டி வராமல் இதை சாதிக்க முடிந்துள்ளது’ என்று கூறியுள்ளார். சீனாவை வெல்லவும், ஆதிக்கம் செலுத்தவும் நாம் மென்மையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். சீனாவில் 50க்கும் மேற்பட்ட பாரதிய வித்யா பவன் கிளைகளை நாம் நிறுவவேண்டும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடித்து வினியோகிக்க வேண்டும். இதன்மூலம் நமது இளைய சகோதரனான சீனாவில் எஞ்சியுள்ள மிச்சம் மீதி கம்யூனிசத்தையும் துடைத்தெறிய முடியும். நாம் அமெரிக்காவில் ஆன்மிகத்தைப் பரப்புவதில் நாட்டம் செலுத்தி வருகிறோம். சீனாவை நோக்கியும் நமது ஆன்மிகப் பார்வை திரும்ப வேண்டும்.

இப்போதைய சீன நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நமது செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். சீனாவில் கம்யூனிசம் நலிந்து கொண்டே வருகிறது. சீன மக்கள் ஒரு மாற்று ஏற்பாட்டை விரும்புகிறார்கள். அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள். மதமும் கலாசாரமும் விலக்கி வைக்கப்பட்டிருந்த காலம் சீனாவில் முற்றிலுமாக காலாவதியாகிவிட்டது. இதைப்போல பல விஷயங்கள் உள்ளன.

பார்க்க:
பேராசியரின் மற்றொரு கட்டுரை (தமிழில்: ஜடாயு)
சீனாவின் தலைவலி, இந்தியாவின் நிவாரணி?

சீனா அதிகாரப்பூர்வமாக 5 மதங்களை அங்கீகரித்துள்ளது. அவற்றுக்கு அனுமதியும் அளித்துள்ளது. புத்தமதம், இஸ்லாம், தாவோயிஸம், புர்ர்ட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், கத்தோலிக்க கிறிஸ்தவம் ஆகியவைதான் அந்த 5 மதங்கள் ஆகும். நமது கலாசாரமும், மதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. பக்தி இல்லை என்றால், கர்னாடக இசை எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அது இசையாகவும் இருக்காது, கலையாகவும் இருக்காது. நமது இசை, நாடகம், கலை, யோகா, ஆயுர்வேதம், ஆன்மிக நூலகள் ஆகியவற்றால் சீனாவை குறிப்பாக சீனாவில் உள்ள நடுத்தர மக்களை கலாசார ரீதியாக முற்றுகையிட்டு அவர்களை வெல்ல வேண்டும். இது நமக்கு புதிதல்ல. ஏற்கனவே நாம் இதைச் செய்துள்ளோம்.

நமது மனோபாவம் மாறவேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாகும். சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

கொள்கை வடிவமைப்பாளர்கள் 60 களிலும், 70 களிலும்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் 2009 க்கு வரவேயில்லை. சீனவில் மிகப்பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பொருளாதார வளம் செழிப்பாக இருக்கிறது. ஆனால் ஆன்மிக ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இந்தியத் தூதராக செயல்பட்ட நிருபமா ராவ் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் சீனாவுக்குத் தகுந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆன்மிக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சீனத் தோழர் ஒருவர் கூறியது சற்று கசப்பானதுதான். அது துரதிர்ஷ்டமானதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதில் உண்மையின் கீற்று காணப்படுகிறது. ‘நமது இரண்டு நாடுகளும் வேரற்ற, திடமற்ற அன்னிய கல்வி பயின்றவர்களால் ஆளப்பட்டு வருவது விசித்திரமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு சொந்த தேசங்களின் கலாசார வேர்கள் குறித்தோ, பண்பாட்டுச் செழுமை குறித்தோ ஆழமான அறிவு எதுவும் கிடையாது’ என்பதுதான் அவர் கூறிய கருத்தாகும்.

ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகளாக நிமிரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் சீனாவில் கம்யூனிஸத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு அங்கு நாம் ஆன்மிக முற்றுகையிட்டால் அது இருதரப்புக்கும் பரஸ்பர நன்மை அளிப்பதாக முடியும். இந்த ஆன்மிக முற்றுகையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகத் தயாரா?

மூலம்: பேரா. ஆர்.வைத்தியநாதன்
தமிழில்: நிகரியவாதி


Saturday, May 1, 2010

இவரை மறக்கலாமா?

Swami Vivekanandaஇந்திய அரசு ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருப்பது யாருக்காவது நினைவிலிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்திய அரசு உட்பட. 1863ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக விளங்கிய வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் சிந்தனைகளும் ஒரு சூறாவளித் தாக்கத்தை மானுட குலத்தில் ஏற்படுத்தின. ஆனால் இப்போதிருக்கும் ‘மதச்சார்பற்ற அரசியல்’ விவேகானந்தரை மறப்பதில் லாபம் காண்கிறது. என் கண்ணில் பட்ட நாட்காட்டிகளில்கூட விவேகானந்தர் பிறந்த தினம், அல்லது தேசிய இளைஞர் தினம் என்ற குறிப்பு இல்லை. இளைஞர் தினம் என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் வாட்டிகன் கத்தோலிக்க இளைஞர்களுக்காக அறிவித்த பன்னாட்டு இளைஞர் தினம் கிடைக்கலாம். ஐ.நா. சபை ஆகஸ்டு 12ஐப் பன்னாட்டு இளைஞர் தினமாக அறிவித்தது கிடைக்கலாம். ஆனால், பாரத தேசத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து பீடுநடை போடச் செய்த விவேகானந்தரைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.

எந்தச் சினிமா நடிகரோ நடிகையோ வந்து விவேகானந்தரைப் பற்றித் தமது மேலான கருத்துக்களை வாரி வழங்க இயலாதென்பதால் டி.வி. நிகழ்ச்சிகளும் கண்ணில் படவில்லை.

நாம் மறந்துவிட்டோம். நமக்கு நல்லது செய்பவர்களைச் சுத்தமாக மறந்து விடுகிறோம். நமக்குத் தீமைசெய்வதையே தமது முழுநேரப் பணியாகக் கொண்டு, அதன்மூலம் சம்பாதிக்கிறவர்களை நாம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறோம்.

தமிழ் இந்துவால் எப்படி மறக்க முடியும்? இந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம், வேதாந்தம், சித்தாந்தம், இலக்கியம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவரும், இசையிலும் கவிதையிலும் தேர்ந்தவரும், இந்த தேசத்து மக்கள் தாழ்ந்து அடிமைத்தனத்தில் கிடக்கும்வரை தனக்கு மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறியவருமான அந்த இணையற்ற மகானை எப்படி மறக்க முடியும்!

விவேகானந்தர் 1891ல் ஆல்வார் நகர இளைஞர்களுடன் பேசும்போது கூறினார்:

“நுண்மையாகக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள், உழையுங்கள் - சரியான நேரம் வரும்போது நமது வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதலாம். பாரதத்தின் வரலாறு இன்று குழம்பிக் கிடக்கிறது. காலவரிசைப்படிச் சரியாகச் சொல்லப்படவில்லை. நமது வீழ்ச்சியைப் பற்றியே பேசும் ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாறு நம் மனதை வலுவிழக்கச் செய்வதாகத்தான் இருக்கும். நமது பழக்கவழக்கங்களையும், சமயத்தையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாத அந்நியர்கள் எப்படி மெய்யான, நடுவுநிலைமையான வரலாற்றை எழுதமுடியும்?”

ஆனால், இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.

விவேகானந்தர் எப்படிப்பட்டவர் என்பதைச் சில சம்பவங்கள் வழியே இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்:

சொல்லும் செயலும் மாறுபடாத சன்னியாசி

ஆகஸ்ட் 1888. சுவாமி ஆக்ராவிலிருந்து நடந்தே பிருந்தாவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் வரப்போகிறது. ஒரு மனிதர் புகையிலையை ‘சில்லம்’ எனப்படும் மண்ணாற் செய்த புகைபிடிப்பானில் அடைத்துப் பிடிப்பதைப் பார்க்கிறார். (அந்தச் சமயத்தில் புகைபிடிப்பதைப் பற்றிய இத்தனை விழிப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லா வட இந்தியக் குடும்பங்களும் ஹூக்கா, சில்லம் அல்லது பைப் இவற்றிலே புகையிலையை அடைத்துப் புகைப்பது மிகச் சாதாரணமாக இருந்தது புத்தகங்களில் தெரியவருகிறது. ஆங்கிலேயர்கள் விருந்துக்குப் பின் பெண்களானால் காப்பி குடிக்கவும், ஆண்களானால் ‘புகைக்கும் அறை’க்கும் செல்வார்கள் என்று அக்காலத்தியப் புதினங்கள் பேசுகின்றன.)

நடந்து களைத்த தனக்கு ஒரு இழுப்பு நல்லது செய்யும் என நினைக்கிறார். “அதைக் கொடுப்பீர்களானால், ஒரு முறை புகையை இழுத்துவிட்டுத் தருகிறேன்” என்றார் துறவி. சில்லம் வைத்திருந்தவர் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார். “நான் மாட்டேன். இதைக் கொடுப்பதன்மூலம் உங்களை நான் அசுத்தப் படுத்திவிடுவேன். நான் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி” என்றார். சுவாமி அங்கிருந்து நகர்ந்தார்.

“என்ன! நான் ஒரு சன்னியாசி. சாதி, குடும்பம், கவுரவம் என்னும் எண்ணங்களைத் துறந்தவன். இருந்தாலும் நான் ‘தோட்டி’ என்றதும் தயங்கினேன். என்னால் அந்தக் குழாயில் புகைபிடிக்க முடியவில்லை. நெடுங்காலப் பழக்கத்தின் அடிமைத்தனம்தான் என்ன!” இந்த எண்ணம் அவரைத் துன்புறுத்தியது.

திரும்பி வந்து அவரருகிலேயே அமர்ந்துகொண்டார். “சகோதரா! ஒரு குழாய் புகையிலை எனக்குக் கொடு” என்றார். “ஐயா, நீங்களோ துறவி. நானோ தீண்டத்தகாதவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அந்தத் துப்புரவுத் தொழிலாளி. சுவாமியா அதைக் கேட்பவர், விடவேயில்லை.

நெடுநாட்களுக்குப் பின் இதை கிரிஷ்சந்திர கோஷ் என்ற நண்பருக்குச் சொன்னபோது அவர் சொன்னார் “நீ புகையிலைக்கு அடிமை. ஆகவே ஒரு தோட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புகைபிடித்தாய்”. “இல்லை கிரீஷ், என்னை நான் சோதித்துக்கொள்ள விரும்பினேன். சன்னியாசத்துக்குப் பின் ஒருவன் தன்னைத் தானே ‘நான் நிறத்துக்கும் சாதிக்கும் அப்பால் தாண்டிப் போய்விட்டேனா?’ என்று சோதித்துக்கொள்வது அவசியம். சன்னியாசத்தின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது கடினம்: சொற்களுக்கும் செயலுக்கும் நடுவே மாறுபாடு இருக்கக் கூடாது” என்றார்.

பின்னொருமுறை ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாமி சொன்னார்: “சன்னியாசத்தின் லட்சியங்களைக் கடைப்பிடிப்பது எளிதென்று நினைக்கிறாயா மகனே? வாழ்வில் இதைவிடக் கடினப் பாதை வேறெதுவும் இல்லை. சிறிது வழுக்கினாலும் அதல பாதாளத்தில் விழுவாய். அந்தச் (தோட்டியிடம் புகைபிடித்த) சம்பவம் ‘யாரையும் வெறுக்காதே, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தாம்’ என்ற பெரிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது”

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்பது உண்மையிலேயே துறவுநெறி பூண்டு, அதில் நிலைபெற்றோருக்கே இயல்வதாக இருக்கிறது. மற்ற எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து வாரி வழங்கிய அந்த வள்ளலுக்குத் தோட்டியும் ஒன்றே, கோடீஸ்வரனும் ஒன்றே.

ராக்ஃபெல்லரின் முதல் நன்கொடை

1894ன் ஆரம்பப் பகுதி. சிகாகோவில் விவேகானந்தர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இல்லத்தரசர் ஏதோ வகையில் ஜான் டி. ராக்ஃபெல்லருடன் தொழில்வகைத் தொடர்பு கொண்டவர். அவரும் பிற நண்பர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அற்புத சன்யாசி பற்றிப் பலமுறை கூறி அவரை அழைத்தும், ராக்ஃபெல்லர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்.

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்.

சுவாமியைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் ஒரு நாள் ஏதோ ஒரு உந்துதலில், திடீரென நண்பரின் வீட்டுக்குள் நுழைந்து, “ஹிந்து சாமியாரைப் பார்க்கணும்” என்று பட்லரிடம் சொன்னார். பட்லர் வரவேற்பறையில் அழைத்துக்கொண்டு போனார். அதற்குள் மளமளவென்று இவர் விவேகானந்தர் இருந்த படிப்பறைக்குள் சென்றார். அங்கே மேசையருகில் அமர்ந்திருந்த சுவாமி நிமிர்ந்துகூடப் பார்க்காதது இவருக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

சற்று நேரத்துக்குப் பின் சுவாமி ராக்ஃபெல்லரின் வாழ்வில் நடந்த, வேறு யாரும் அறிந்திருக்க முடியாத சில விஷயங்களைச் சொன்னார். “உன் செல்வம் உனக்கே உரியது என்று நினைத்துவிடாதே. நீ ஒரு வழங்கு குழாய்தான். உனது கடமை உலகுக்கு நன்மை செய்தல். கடவுள் அதற்கு ஒரு வாய்ப்பை இந்தச் செல்வத்தின் மூலம் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். மக்களுக்கு நன்மை செய்”.

(சுவாமி தனக்கு நன்கொடை கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது. தான் பேச்சுக்கள் மூலம் ஈட்டியதை அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததும் உண்டு. ஒருமுறை பால்டிமோரில் வ்ரூமன் சகோதரர்கள் துவங்கத் திட்டமிட்டிருந்த ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அவ்வூரில் பேசியதில் வந்த பணத்தை வழங்கினார்.)

ராக்ஃபெல்லருக்கு எரிச்சல் வந்தது. இந்தப் பாணியில் யாரும் இதுவரை அவரிடம் பேசமுனைந்ததோ, இன்னது செய் அன்று உபதேசித்ததோ கிடையாது. ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் வெளியே நடந்தார் ராக்ஃபெல்லர்.

ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து சுவாமியை அதே அறையில் பார்த்தார். ஒரு அமெரிக்கப் பொது நிறுவனத்துக்குப் பெரிய தொகையை வழங்குவதற்கான திட்டம் குறித்த ஒரு ஆவணத்தை சுவாமியின் மேசைமேல் வைத்தார். “இப்போது உங்களுக்குத் திருப்தியாக இருக்கவேண்டுமே, எனக்கு நன்றி சொல்லவேண்டும் நீங்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.

சுவாமி அசையவோ, கண்களை உயர்த்தவோ இல்லை. அந்தத் தாளை எடுத்துப் பார்த்துவிட்டு “நீயல்லவா எனக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். பொதுநலப் பணிக்கு ராக்ஃபெல்லர் கொடுத்த முதல் நன்கொடை அதுதான்.

மரம்பழுத்தால் வௌவாலை வாஎன்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை - சுரந்துஅமுதம்
கற்றா தரல் போல கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

(நல்வழி, ஔவையார், பாடல்: 29)

உலகத்தவர் தம்மவர் ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் எப்படிப் பசு தன் கன்றுக்கு மறைத்துவைக்காமல் பால் தருகிறதோ அதே அன்போடு தம் செல்வத்தைத் தரவேண்டுமாம். செல்வமுடையவருக்கு அவ்வெண்ணம் வராத போது நினைவூட்டுதல் தன்னலமற்ற துறவியரின் பணியாக இருந்திருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்த கல்விக் கூடங்களில், அலுவலகங்களில், சேவை அமைப்புகளில், குடியிருப்புச் சங்கங்களில், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஜனவரி 12ஐ இளைஞர் தினமாகக் கொண்டாட வற்புறுத்துங்களில். விவேகானந்தரை உலகுக்கு நினைவுபடுத்துங்கள். மீண்டும் ஆன்மீக, கலாச்சார, தேசீயத் தன்மான விழிப்புணர்வுக்கு வழி செய்யுங்கள்.

விவேகானந்தரை மறந்தால் பாரதத்துக்கு உய்வு கிடையாது.