பெயர் : வயது :
முகவரி :
தொலைபேசி எண் :
கருத்து :



இந்தியா விடுதலை அடைந்து அறுபதாண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சமுதாய வன்கொடுமைகளோ தொடர்கின்றன தொடர்கதையாக.
சொந்த நாட்டில், சொந்த சகோதரர்களால் தீண்டத்தகாதவராக நடத்தப்பட்ட சமுதாயத்தினர் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார்கள். தீண்டாமையை ஒரு வன்கொடுமையாக பிரகடனம் செய்கிறது அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியல் சட்டம். தீண்டாமை ஒரு பாவம் என்கிறார் மகாத்மா காந்தி. ஆனால் இவை அனைத்துக்கும் அப்பால், கிராமங்களில் வாழ்வதற்கான உரிமையும் சுயமரியாதையும் தலித் சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டே வருகின்றன.
அத்தகைய ஒரு நிகழ்ச்சிதான், திண்டுக்கல் மாவட்டம் மெய்கோவில்பட்டி கிராமத்தில், தேவேந்திரகுல வெள்ளாளர் எனப்படும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சடையாண்டி என்கிற இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆனால் அதிகார வர்க்கமும் சாதி உணர்வும் இணையும் போது, அநீதி இழைக்கப்பட்டவரே குற்றவாளி போல தலைமறைவாக வாழ நேரி்ட்டுவிடுகிறது. இது கொடுமையின் உச்சங்களில் ஒன்று.
இன்று குடும்பத்தையும் கைக்குழந்தையையும் விட்டு சொந்த ஊரையும் விட்டு தலைமறைவாக பகுஜன்சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார் அந்த இளைஞர். அவர் செய்த குற்றம்தான் என்ன?
அந்த கிராமத்தின் தலித் பகுதிகளில் இரண்டு தலித் வகுப்பினர் வசிக்கின்றனர். கிராமத்தின் பிற பதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தலித் பகுதியின் ஆதார அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருந்தன. வீதிகளின் அருகிலேயே குண்டு குழிகள், கழிப்பிட வசதி இல்லாதது போன்ற அவலங்கள். விசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாத குழந்தை.இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாகக் காண முடிகிறது. சடையாண்டி மீதான தாக்குதல் கிறிஸ்தவ ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டது என்ற உண்மை, மதம் மாறினால், சாதியம் அப்படியே மறைந்துவிடாது என்பதை மீண்டும் முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது.ஆனால் இதில் ஒளிந்திருக்கும் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உண்மை நிலவரம் என்ன என்று அறிய அந்த இளைஞரின் கிராமத்துக்கு சென்ற போதுதான், அந்த உண்மையின் மற்றொரு விசித்திரம் நமக்கு காணக்கிடைத்தது. அது வேதனையானதும் கூட.காவல் துறையிலும், உள்ளூர் அரசு சேவை மையங்களிலும், கல்விச்சாலைகளிலும் தலித் சமுதாயத்தினருக்கு பாதுகாப்பில்லை. அரசு அதிகாரிகள் தலித்துகளை சரியான முறையில் கவனிப்பதில்லை முழுமையான நேரத்தை ஆதிக்க சாதியினருடனேயே செலவழிக்கின்றனர் என்பது தலித் மக்களின் குமுறல்.
ஆதிக்க சாதிகள் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுடன் இணைந்துகொண்டு, நலிவுற்ற பிரிவினரை, அதிலும் குறிப்பாக மதம் மாறாமல் இருக்கும் நலிவுற்ற பிரிவினரை அதிக உக்கிரத்துடன் தாக்குகிறார்கள். நாம் இந்த மக்களிடம் பேசியபோது, இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
கிறிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
முதலாவதாக, தலித்துகளின் குடியிருப்புக்களை சுற்றி நிலங்களை வளைத்துப் போட்டுவிட்டு, ஆதிக்கசாதியினருக்கு ஆதரவாக பாதிரியார் தலைமையில் வேலி அமைத்திருக்கிறார்கள். இரண்டாவதாக, கிறிஸ்தவ மக்களுக்கும் தலித் இந்துக்களுக்கும் இருக்கும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில், வேண்டுமென்றே கிறிஸ்தவ சப்பர விழாவை அம்மன் கோவிலை ஒட்டி நடத்தி கோவிலில் சிறிய உடைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.பொதுவாக இரண்டு ஊர் மக்களையும் இணைக்கும் ஒரு பாலமாக காளியம்மன் கோவில் இருந்திருக்கிறது. பல ஆதிக்க சாதி சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் (கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்த போதிலும் கூட!!) தாங்கள் காளியம்மன் மீது சத்தியமாக, தலித் சமுதாயத்தினரை தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கவில்லை என்றார்கள். இந்த தாக்குதல் நடக்கவேயில்லை என்ற பேச்சையும், அது ’சின்னப் பசங்க’ செய்த தவறு என்ற பேச்சையும் ஆதிக்க சாதியினரிடையே காணமுடிந்தது. மேலும் இரண்டு பக்கங்களிலுமே சாதியத்தலைவர்களின் பங்கு எதிர்மறையாக உள்ளதை தலித் மக்கள் எடுத்துச் சொன்னார்கள்.
தலித்துகளுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே நிலவும் உறவுகள் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டவை. மானுடத்தின் சுய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவை. இது ஒரு பக்கம்.
மற்றொரு பக்கம் பாரம்பரிய சாதிகளுக்கு இடையேயான உறவுகளில் ஒருவித பங்காளி உறவுத் தன்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உறவுத் தன்மையை வலுப்படுத்திக்கொண்டே, சுரண்டலையும், மானுடமற்ற சாதிய வெறியையும் அழிப்பதுதான் இன்றைக்கு சமுதாயத் தலைவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரிய சவால்.சாதியக் கொடுமைகள் யாரை நோக்கி ஏவப் படுகிறதோ அவரை காயப் படுத்துகின்றன. அந்தக் காயங்கள் அவரை வலிமையாக்கும். சமூக நீதிக்கான போராட்டத்தின் தேவையை அவை வெளிப்படுத்தும். ஆனால் கொடுமை செய்பவருக்கோ அது ஆழமான ஆன்மிக வடுவையே ஏற்படுத்துகிறது. கொடுமை செய்பவரை மானுடத்தன்மையிலிருந்து கீழே இறக்கி விடுகிறது.
வெறும் சாதி உணர்வுகளை தூண்டிவிடுபவர்களோ அல்லது அடங்கி செல்ல அறிவுறுத்துவோரோ தலித் விடுதலையை வென்றெடுக்க முடியாது. தமிழகத்தின் தலித் தலைவராக தன்னைத்தானே ஏகபோகமாக முடிசூடிக்கொள்ளும் சிலர், அன்றைக்கு மட்டுமல்ல, அதற்கு பிறகும் அங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. இந்த கசப்பான உண்மை இந்த யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.பிறர் மீது வெறுப்பை சுமக்காமல், சாதியமற்ற சமுதாயத்தை ஏற்படுத்த நமது ஆன்மிக சமுதாயத் தலைவர்கள் நல்வழியைக் காட்டியுள்ளார்கள். புத்தரின் அறவழியைத் தேர்ந்தெடுத்த அண்ணல் அம்பேத்கர், அத்வைதம் கூறும் ஆன்மிக விடுதலையை சமுதாய நீதிக்கு விரிவாக்கிய நாராயணகுரு, தாழ்த்தப் பட்டவர்களுக்காக இன்னுயிர் ஈந்த வீரன் சேகரன், சிதம்பரத்தில் நந்தனாரே மீண்டு வந்ததது போல நமக்காக போராடிய துறவி சகஜானந்தர் ஆகியோர் காட்டிய வழியில் நாம் செல்ல வேண்டும்.
அந்த வழி எளிதான வழியல்ல.
ஆடம்பரத்தின் வழியல்ல.
வன்முறையின் வழியல்ல.
உண்மையான வீரத்தின் வழி.
தியாகத்தின் வழி.
முட்பாதைகள் நிறைந்த வழி.
நாம் அந்தப் பாதைகளில் நடந்து உரிமைகளை வென்றெடுப்போம். அன்பும் தோழமையும் மானுடமும் கொண்ட ஆன்மநேய தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவோம். நம் குழந்தைகள் சாதியத்தின் விஷக்கடிகள் எதுவுமின்றி, மலர்மீது நாளை நடப்பார்கள்.
சீனாவில் இப்போதெல்லாம் மதத்தை இழிவாகப் பார்ப்பதில்லை. 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 17 ஆவது சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹூ ஜிண்டாவோ நிகழ்த்திய உரையில் ஒரு பத்தி, மதத்திற்காக முழுமையாக ஒதுக்கப்பட்டு இருந்தது. பேராயர்கள், மதகுருக்கள், துறவிகள், மத நம்பிக்கையாளர்கள் ஆகியோர் எல்லாம் சீனாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். எனவே மதம் மக்களுக்கு அபின் போன்றது என்ற கடந்த கால கோட்பாடு காலாவதி ஆகிவிட்டது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனமான ‘சின் குவா’ மத சுதந்திரத்தை வலியுறுத்தி வருகிறது. நல்லிணக்கம் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதில் மதம் முக்கியப் பங்காற்றி வருகிறது என்று ‘சின் குவா’ குறிப்பிட்டு வருகிறது. இதை முக்கியமான அம்சமாகக் கருதி இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். நார்மல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 சீனப் பேராசிரியர்கள் மத நம்பிக்கை தொடர்பாக விரிவான ஆரய்ச்சி நடத்தினார்கள். 2007 இல் இந்த ஆராய்ச்சி நடைபெற்ற்து. 4,500 பேரிடம் கருத்து கேட்டு விவரம் சேகரிக்கப்பட்டது.
மொத்த ஜனத்தொகையில் 31 சதவீதத்தினர் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 16 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களில் 60 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 1990 களில் கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் 8 சதவீதத்திற்கும் குறைவே. இது இப்போது 12 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் அதிகரிப்பு முக்கியமான விஷயமாகும்.
சீனாவில் பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயம் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் முன்பு முக்கிய பொறுப்பாளராக இருந்த ஜாவோ ஜியாவோ என்பவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி பிரச்சாரம் செய்துவருகிறார். சீனாவில் 13 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி சீனாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் மட்டும்தான். இதில் 1 கோடியே 10 லட்சம் புரோட்டஸ்டண்டுகள் ஆவர். 50 லட்சம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். ஜாவோ ஜியாவோ தெரிவித்துள்ள புள்ளிவிவரம் உண்மையெனில் சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சீன கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 கோடியே 40 லட்சம் மட்டுமே.
சீனாவில் மாபெரும் மற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெறும் பொருளாதார மாற்றங்களை மட்டும் நாம் பார்க்கக்கூடாது.
பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன, வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒலிம்பிக் அரங்கங்கள் நிமாணிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு அப்பாலும் பல அபூர்வ நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுள்ளன. மேற்கத்திய பார்வை என்பது உலகியல் சார்ந்தது. உலகியல் சார்பற்றவற்றையும் கவனிப்பதுதான் கிழக்கத்திய பார்வையாகும்.
மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நடைபெற்று வரும் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். முஸ்ஸிம்களின் செயல்பாடும், கிறிஸ்தவர்களின் செயல்பாடும் குறிப்பாக தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்தவ தேவாலயமும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. மத்திய தர வர்க்கத்தினரின் உணவுப் பழக்க வழக்கமும் மாறத் தொடங்கி உள்ளது. சீனர்கள் பாரம்பரியமாக அரிசி உணவை சாப்பிடுவது வழக்கம். இப்போது அரிசி உணவைச் சாப்பிடுவது குறைந்துள்ளது. நன்கு படிக்காத ஏழைகள் மட்டும்தான் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். புதிதாக கிறிஸ்தவத்திஅத் தழுவியவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளித்துள்ளன. வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் இது உதவுகிறது.
மேற்கு பகுதிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சீனாவில் கடந்த காலத்தைப் பற்றி அறியும் ஆவல் மேலோங்கி உள்ளது. சீனாவில் 1960 களில் கலாசார புரட்சி நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள மிங் வம்சத்தைச் சேர்ந்த ராஜ பரம்பரையினரின் சமாதிகள் வெண்பளிங்கில் பளிச்சிட்டு வந்தன. கலாசார புரட்சியின்போது அவற்றுக்கெல்லாம் சிவப்பு வர்ணம் தீட்டப்பட்டது. இப்போது அவற்றை மீண்டும் வெள்ளை நிறத்திற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் இது குறித்துப் பேச தயங்குவது கிடையாது. பெய்ஜிங் நகர் அருகே உள்ள ஒரு புராதனமான இடத்தில் கிங் ராஜ வம்சத்தினரின் கோடைகால அரண்மனை உள்ளது. அதில் 10 கரங்களைக் கொண்ட புத்தரின் சிலை உள்ளது. இதற்கும் விஷ்ணுவுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. இது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, வெளிநாடுகளில் பிரிட்டீஷ் கவுன்சிலை நிறுவி தனது கலாசாரத்தை பரப்பி வருவதைப்போல சீனா 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கன்பூஷ்யஸ் நிறுவனத்தை நிறுவி தொன்மையான சீன ஞானத்தைப் பரப்பி வருகிறது.
மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு சீனாவைப் பார்ப்பதை நாம் கைவிட வேண்டும். சீனாவில் பொருளாதார வளர்ச்சி அமோகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆழமான ஆன்மிக நாட்டம் வலுவாக உள்ளது என்று கூற முடியவில்லை. மார்க்சிஸம் சீனாவில் அர்த்தத்தை இழந்துவிட்டது. புதிய சீனா நமக்கு ஒரு மகத்தான சவாலாகும். இந்தியாவும், சீனாவும் பழங்காலம் முதலே அறிவு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தன. சீனாவும் பல மதங்களைக் கொண்ட கலாசாரங்களைக் கொண்ட நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா மீது சீனர்களுக்கு மிகுந்த நாட்டம் உள்ளது.
1938 முதல் 1942 வரை அமெரிக்காவில் சீனத் தூதராகச் செயல்பட்ட ஜூஷி, ’சீனாவை இந்தியா கலாசார ரீதியாக ஆக்ரமித்து 20 நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு போர் வீரர் கூட எல்லையைத் தாண்டி வராமல் இதை சாதிக்க முடிந்துள்ளது’ என்று கூறியுள்ளார். சீனாவை வெல்லவும், ஆதிக்கம் செலுத்தவும் நாம் மென்மையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். சீனாவில் 50க்கும் மேற்பட்ட பாரதிய வித்யா பவன் கிளைகளை நாம் நிறுவவேண்டும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சடித்து வினியோகிக்க வேண்டும். இதன்மூலம் நமது இளைய சகோதரனான சீனாவில் எஞ்சியுள்ள மிச்சம் மீதி கம்யூனிசத்தையும் துடைத்தெறிய முடியும். நாம் அமெரிக்காவில் ஆன்மிகத்தைப் பரப்புவதில் நாட்டம் செலுத்தி வருகிறோம். சீனாவை நோக்கியும் நமது ஆன்மிகப் பார்வை திரும்ப வேண்டும்.
இப்போதைய சீன நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நமது செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். சீனாவில் கம்யூனிசம் நலிந்து கொண்டே வருகிறது. சீன மக்கள் ஒரு மாற்று ஏற்பாட்டை விரும்புகிறார்கள். அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள். மதமும் கலாசாரமும் விலக்கி வைக்கப்பட்டிருந்த காலம் சீனாவில் முற்றிலுமாக காலாவதியாகிவிட்டது. இதைப்போல பல விஷயங்கள் உள்ளன.
பார்க்க:
பேராசியரின் மற்றொரு கட்டுரை (தமிழில்: ஜடாயு)
சீனாவின் தலைவலி, இந்தியாவின் நிவாரணி?
சீனா அதிகாரப்பூர்வமாக 5 மதங்களை அங்கீகரித்துள்ளது. அவற்றுக்கு அனுமதியும் அளித்துள்ளது. புத்தமதம், இஸ்லாம், தாவோயிஸம், புர்ர்ட்டஸ்டண்ட் கிறிஸ்தவம், கத்தோலிக்க கிறிஸ்தவம் ஆகியவைதான் அந்த 5 மதங்கள் ஆகும். நமது கலாசாரமும், மதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்கவே முடியாது. பக்தி இல்லை என்றால், கர்னாடக இசை எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அது இசையாகவும் இருக்காது, கலையாகவும் இருக்காது. நமது இசை, நாடகம், கலை, யோகா, ஆயுர்வேதம், ஆன்மிக நூலகள் ஆகியவற்றால் சீனாவை குறிப்பாக சீனாவில் உள்ள நடுத்தர மக்களை கலாசார ரீதியாக முற்றுகையிட்டு அவர்களை வெல்ல வேண்டும். இது நமக்கு புதிதல்ல. ஏற்கனவே நாம் இதைச் செய்துள்ளோம்.
நமது மனோபாவம் மாறவேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாகும். சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.
கொள்கை வடிவமைப்பாளர்கள் 60 களிலும், 70 களிலும்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் 2009 க்கு வரவேயில்லை. சீனவில் மிகப்பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு பொருளாதார வளம் செழிப்பாக இருக்கிறது. ஆனால் ஆன்மிக ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இந்தியத் தூதராக செயல்பட்ட நிருபமா ராவ் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவர் சீனாவுக்குத் தகுந்தவர்களை அனுப்பி வைக்க வேண்டும். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆன்மிக உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது சீனத் தோழர் ஒருவர் கூறியது சற்று கசப்பானதுதான். அது துரதிர்ஷ்டமானதாகக் கூட தோன்றலாம். ஆனால் அதில் உண்மையின் கீற்று காணப்படுகிறது. ‘நமது இரண்டு நாடுகளும் வேரற்ற, திடமற்ற அன்னிய கல்வி பயின்றவர்களால் ஆளப்பட்டு வருவது விசித்திரமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு சொந்த தேசங்களின் கலாசார வேர்கள் குறித்தோ, பண்பாட்டுச் செழுமை குறித்தோ ஆழமான அறிவு எதுவும் கிடையாது’ என்பதுதான் அவர் கூறிய கருத்தாகும்.
ஆசியாவில் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகளாக நிமிரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத் தருணத்தில் சீனாவில் கம்யூனிஸத்தை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டு அங்கு நாம் ஆன்மிக முற்றுகையிட்டால் அது இருதரப்புக்கும் பரஸ்பர நன்மை அளிப்பதாக முடியும். இந்த ஆன்மிக முற்றுகையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகத் தயாரா?
மூலம்: பேரா. ஆர்.வைத்தியநாதன்
தமிழில்: நிகரியவாதி
இந்திய அரசு ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருப்பது யாருக்காவது நினைவிலிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்திய அரசு உட்பட. 1863ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக விளங்கிய வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் சிந்தனைகளும் ஒரு சூறாவளித் தாக்கத்தை மானுட குலத்தில் ஏற்படுத்தின. ஆனால் இப்போதிருக்கும் ‘மதச்சார்பற்ற அரசியல்’ விவேகானந்தரை மறப்பதில் லாபம் காண்கிறது. என் கண்ணில் பட்ட நாட்காட்டிகளில்கூட விவேகானந்தர் பிறந்த தினம், அல்லது தேசிய இளைஞர் தினம் என்ற குறிப்பு இல்லை. இளைஞர் தினம் என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் வாட்டிகன் கத்தோலிக்க இளைஞர்களுக்காக அறிவித்த பன்னாட்டு இளைஞர் தினம் கிடைக்கலாம். ஐ.நா. சபை ஆகஸ்டு 12ஐப் பன்னாட்டு இளைஞர் தினமாக அறிவித்தது கிடைக்கலாம். ஆனால், பாரத தேசத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து பீடுநடை போடச் செய்த விவேகானந்தரைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.
எந்தச் சினிமா நடிகரோ நடிகையோ வந்து விவேகானந்தரைப் பற்றித் தமது மேலான கருத்துக்களை வாரி வழங்க இயலாதென்பதால் டி.வி. நிகழ்ச்சிகளும் கண்ணில் படவில்லை.
நாம் மறந்துவிட்டோம். நமக்கு நல்லது செய்பவர்களைச் சுத்தமாக மறந்து விடுகிறோம். நமக்குத் தீமைசெய்வதையே தமது முழுநேரப் பணியாகக் கொண்டு, அதன்மூலம் சம்பாதிக்கிறவர்களை நாம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறோம்.
தமிழ் இந்துவால் எப்படி மறக்க முடியும்? இந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம், வேதாந்தம், சித்தாந்தம், இலக்கியம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவரும், இசையிலும் கவிதையிலும் தேர்ந்தவரும், இந்த தேசத்து மக்கள் தாழ்ந்து அடிமைத்தனத்தில் கிடக்கும்வரை தனக்கு மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறியவருமான அந்த இணையற்ற மகானை எப்படி மறக்க முடியும்!
விவேகானந்தர் 1891ல் ஆல்வார் நகர இளைஞர்களுடன் பேசும்போது கூறினார்:
“நுண்மையாகக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள், உழையுங்கள் - சரியான நேரம் வரும்போது நமது வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதலாம். பாரதத்தின் வரலாறு இன்று குழம்பிக் கிடக்கிறது. காலவரிசைப்படிச் சரியாகச் சொல்லப்படவில்லை. நமது வீழ்ச்சியைப் பற்றியே பேசும் ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாறு நம் மனதை வலுவிழக்கச் செய்வதாகத்தான் இருக்கும். நமது பழக்கவழக்கங்களையும், சமயத்தையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாத அந்நியர்கள் எப்படி மெய்யான, நடுவுநிலைமையான வரலாற்றை எழுதமுடியும்?”
ஆனால், இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.
விவேகானந்தர் எப்படிப்பட்டவர் என்பதைச் சில சம்பவங்கள் வழியே இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்:
சொல்லும் செயலும் மாறுபடாத சன்னியாசி
ஆகஸ்ட் 1888. சுவாமி ஆக்ராவிலிருந்து நடந்தே பிருந்தாவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் வரப்போகிறது. ஒரு மனிதர் புகையிலையை ‘சில்லம்’ எனப்படும் மண்ணாற் செய்த புகைபிடிப்பானில் அடைத்துப் பிடிப்பதைப் பார்க்கிறார். (அந்தச் சமயத்தில் புகைபிடிப்பதைப் பற்றிய இத்தனை விழிப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லா வட இந்தியக் குடும்பங்களும் ஹூக்கா, சில்லம் அல்லது பைப் இவற்றிலே புகையிலையை அடைத்துப் புகைப்பது மிகச் சாதாரணமாக இருந்தது புத்தகங்களில் தெரியவருகிறது. ஆங்கிலேயர்கள் விருந்துக்குப் பின் பெண்களானால் காப்பி குடிக்கவும், ஆண்களானால் ‘புகைக்கும் அறை’க்கும் செல்வார்கள் என்று அக்காலத்தியப் புதினங்கள் பேசுகின்றன.)
நடந்து களைத்த தனக்கு ஒரு இழுப்பு நல்லது செய்யும் என நினைக்கிறார். “அதைக் கொடுப்பீர்களானால், ஒரு முறை புகையை இழுத்துவிட்டுத் தருகிறேன்” என்றார் துறவி. சில்லம் வைத்திருந்தவர் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார். “நான் மாட்டேன். இதைக் கொடுப்பதன்மூலம் உங்களை நான் அசுத்தப் படுத்திவிடுவேன். நான் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி” என்றார். சுவாமி அங்கிருந்து நகர்ந்தார்.
“என்ன! நான் ஒரு சன்னியாசி. சாதி, குடும்பம், கவுரவம் என்னும் எண்ணங்களைத் துறந்தவன். இருந்தாலும் நான் ‘தோட்டி’ என்றதும் தயங்கினேன். என்னால் அந்தக் குழாயில் புகைபிடிக்க முடியவில்லை. நெடுங்காலப் பழக்கத்தின் அடிமைத்தனம்தான் என்ன!” இந்த எண்ணம் அவரைத் துன்புறுத்தியது.
திரும்பி வந்து அவரருகிலேயே அமர்ந்துகொண்டார். “சகோதரா! ஒரு குழாய் புகையிலை எனக்குக் கொடு” என்றார். “ஐயா, நீங்களோ துறவி. நானோ தீண்டத்தகாதவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அந்தத் துப்புரவுத் தொழிலாளி. சுவாமியா அதைக் கேட்பவர், விடவேயில்லை.
நெடுநாட்களுக்குப் பின் இதை கிரிஷ்சந்திர கோஷ் என்ற நண்பருக்குச் சொன்னபோது அவர் சொன்னார் “நீ புகையிலைக்கு அடிமை. ஆகவே ஒரு தோட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புகைபிடித்தாய்”. “இல்லை கிரீஷ், என்னை நான் சோதித்துக்கொள்ள விரும்பினேன். சன்னியாசத்துக்குப் பின் ஒருவன் தன்னைத் தானே ‘நான் நிறத்துக்கும் சாதிக்கும் அப்பால் தாண்டிப் போய்விட்டேனா?’ என்று சோதித்துக்கொள்வது அவசியம். சன்னியாசத்தின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது கடினம்: சொற்களுக்கும் செயலுக்கும் நடுவே மாறுபாடு இருக்கக் கூடாது” என்றார்.
பின்னொருமுறை ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாமி சொன்னார்: “சன்னியாசத்தின் லட்சியங்களைக் கடைப்பிடிப்பது எளிதென்று நினைக்கிறாயா மகனே? வாழ்வில் இதைவிடக் கடினப் பாதை வேறெதுவும் இல்லை. சிறிது வழுக்கினாலும் அதல பாதாளத்தில் விழுவாய். அந்தச் (தோட்டியிடம் புகைபிடித்த) சம்பவம் ‘யாரையும் வெறுக்காதே, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தாம்’ என்ற பெரிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது”
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
என்பது உண்மையிலேயே துறவுநெறி பூண்டு, அதில் நிலைபெற்றோருக்கே இயல்வதாக இருக்கிறது. மற்ற எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம் அல்லவா?
இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து வாரி வழங்கிய அந்த வள்ளலுக்குத் தோட்டியும் ஒன்றே, கோடீஸ்வரனும் ஒன்றே.
ராக்ஃபெல்லரின் முதல் நன்கொடை
1894ன் ஆரம்பப் பகுதி. சிகாகோவில் விவேகானந்தர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இல்லத்தரசர் ஏதோ வகையில் ஜான் டி. ராக்ஃபெல்லருடன் தொழில்வகைத் தொடர்பு கொண்டவர். அவரும் பிற நண்பர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அற்புத சன்யாசி பற்றிப் பலமுறை கூறி அவரை அழைத்தும், ராக்ஃபெல்லர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்.
ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்.
சுவாமியைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் ஒரு நாள் ஏதோ ஒரு உந்துதலில், திடீரென நண்பரின் வீட்டுக்குள் நுழைந்து, “ஹிந்து சாமியாரைப் பார்க்கணும்” என்று பட்லரிடம் சொன்னார். பட்லர் வரவேற்பறையில் அழைத்துக்கொண்டு போனார். அதற்குள் மளமளவென்று இவர் விவேகானந்தர் இருந்த படிப்பறைக்குள் சென்றார். அங்கே மேசையருகில் அமர்ந்திருந்த சுவாமி நிமிர்ந்துகூடப் பார்க்காதது இவருக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.
சற்று நேரத்துக்குப் பின் சுவாமி ராக்ஃபெல்லரின் வாழ்வில் நடந்த, வேறு யாரும் அறிந்திருக்க முடியாத சில விஷயங்களைச் சொன்னார். “உன் செல்வம் உனக்கே உரியது என்று நினைத்துவிடாதே. நீ ஒரு வழங்கு குழாய்தான். உனது கடமை உலகுக்கு நன்மை செய்தல். கடவுள் அதற்கு ஒரு வாய்ப்பை இந்தச் செல்வத்தின் மூலம் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். மக்களுக்கு நன்மை செய்”.
(சுவாமி தனக்கு நன்கொடை கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது. தான் பேச்சுக்கள் மூலம் ஈட்டியதை அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததும் உண்டு. ஒருமுறை பால்டிமோரில் வ்ரூமன் சகோதரர்கள் துவங்கத் திட்டமிட்டிருந்த ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அவ்வூரில் பேசியதில் வந்த பணத்தை வழங்கினார்.)
ராக்ஃபெல்லருக்கு எரிச்சல் வந்தது. இந்தப் பாணியில் யாரும் இதுவரை அவரிடம் பேசமுனைந்ததோ, இன்னது செய் அன்று உபதேசித்ததோ கிடையாது. ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் வெளியே நடந்தார் ராக்ஃபெல்லர்.
ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து சுவாமியை அதே அறையில் பார்த்தார். ஒரு அமெரிக்கப் பொது நிறுவனத்துக்குப் பெரிய தொகையை வழங்குவதற்கான திட்டம் குறித்த ஒரு ஆவணத்தை சுவாமியின் மேசைமேல் வைத்தார். “இப்போது உங்களுக்குத் திருப்தியாக இருக்கவேண்டுமே, எனக்கு நன்றி சொல்லவேண்டும் நீங்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.
சுவாமி அசையவோ, கண்களை உயர்த்தவோ இல்லை. அந்தத் தாளை எடுத்துப் பார்த்துவிட்டு “நீயல்லவா எனக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். பொதுநலப் பணிக்கு ராக்ஃபெல்லர் கொடுத்த முதல் நன்கொடை அதுதான்.
மரம்பழுத்தால் வௌவாலை வாஎன்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை - சுரந்துஅமுதம்
கற்றா தரல் போல கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
(நல்வழி, ஔவையார், பாடல்: 29)
உலகத்தவர் தம்மவர் ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் எப்படிப் பசு தன் கன்றுக்கு மறைத்துவைக்காமல் பால் தருகிறதோ அதே அன்போடு தம் செல்வத்தைத் தரவேண்டுமாம். செல்வமுடையவருக்கு அவ்வெண்ணம் வராத போது நினைவூட்டுதல் தன்னலமற்ற துறவியரின் பணியாக இருந்திருக்கிறது.
உங்களுக்குத் தெரிந்த கல்விக் கூடங்களில், அலுவலகங்களில், சேவை அமைப்புகளில், குடியிருப்புச் சங்கங்களில், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஜனவரி 12ஐ இளைஞர் தினமாகக் கொண்டாட வற்புறுத்துங்களில். விவேகானந்தரை உலகுக்கு நினைவுபடுத்துங்கள். மீண்டும் ஆன்மீக, கலாச்சார, தேசீயத் தன்மான விழிப்புணர்வுக்கு வழி செய்யுங்கள்.
விவேகானந்தரை மறந்தால் பாரதத்துக்கு உய்வு கிடையாது.